விசுவரூபம்..

இது முழுக்க கமல் பற்றியோ, விஸ்வரூபம் படத்தினை பற்றியோ எழுதப்பட்ட பதிவு இல்லை. நான் காசுக்காகவோ, வேறு எதுவும் விளம்பரத்திற்க்காகவோ எழுதுபவனும் அல்ல. சராசரிக்கும் சற்று அதிகமான குறைகுளுடைய எனது ‘மூளை – அறிவு’ ஐ, இங்கு சமூகம் பைத்தியம் என்று அடையாளப்படுத்தும் சுட்டிகளின் கரங்கள் தீண்டிவிடாமல் இருக்க நான் கைகொள்ளும் பிரயத்தனங்களுள் ஒன்று பதிவுகள் எழுதுவது. கொட்டாவி வரவழைக்கும் இந்த கொழ – கொழா வாக்கியங்கள் என்னையும், என் வெறுப்பு விருப்புகளையும் பாதுகாத்து கொள்ள. நான் பிறந்த சமூகம் ஒன்றை ஒன்று அடித்து கொள்ள காரணங்கள் தேடப்படுகையில், இது போன்ற கொழ – கொழப்பு அவசியம் ஆகிறது. ஒருவனுடைய தனிமனித சுதந்திரம் எந்த அளவு மதிக்கப்படுகிறது என்பதனை ‘ராஜன் – சின்மயி’ பிரச்சனையில் சற்று அருகில் இருந்து பார்த்ததில் ஏற்பட்ட கலக்கம். முன்னுரையை முடிக்கிறேன். இவ்வளவு தூரம் தாண்டிவிட்ட நீங்கள் கருத்து சுதந்திரத்தை மதிப்பவராக இருந்தால் மட்டும் அடுத்த பத்தி வரவும். இல்லையென்றால் நலம். Facebook இருக்கிறது. வெறியேற்றும் பதிவு ஏதாவது ஒன்றை பகிர்ந்து சென்றபடி இருக்கலாம்.

விஸ்வரூபம். முதல் படம் நடிக்கும் ‘பொன் குஞ்சுகள்’ கூட கையை காலை ஆட்டியபடி விசுக் விசுக் எனும் சத்தத்துடன் நடக்க பிரயத்தனப்படும், மேலே போன camera கீழே இறங்குகையில் வெடுக்கென திரும்பி woodlandகள் தரையை தீப்பெட்டி மட்டையாக்கி நடக்கையில் வாத்தியங்கள் முழங்க வண்ண வண்ண பொடி பறக்க – நிறுத்தம் – அந்த படம் இல்லை இது. சம்பந்தமற்ற துதிபாடுதல் ஓரிரு இடங்களில் உண்டு. அதையும் மீறி கமல் சொல்லும் கருத்தும், அவர் அதற்காக எடுத்தாண்ட ஒரு மிகப்பெரிய கனவு – நினைவாகுதல் இந்த முயற்சி. கோடம்பாக்கத்துக்கு பெருமை. அல்-கொய்தா – FBI – RAW என பரந்த கதைக்களம். கமல் இந்து நாளிதழில் நாயகன் 25ஆம் ஆண்டு   நினைவுகூறல் பதிவொன்று எழுதி இருந்தார். அதற்கும் முன் காந்தியை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பது பற்றி ஒரு பேட்டி. முன்னது ஒரு படத்தின் தரத்திற்கு கமல் எடுக்கும் முயற்சியையும், பின்னது அன்பு – கருணை பற்றிய கமலின் புரிதலையும் எடுத்துரைக்கும். இந்து – முஸ்லிம் பிரச்சனை, ஒற்றுமை பற்றிய கமலின் புரிதலை ஹேராம் பார்த்தவர்கள் அறிவார்கள். படத்தை சுற்றியுள்ள context ஒரு புறம் இருக்கட்டும். படம் பார்த்த தமிழ் திருமகன்கள் கூறிய கருத்துகள் ‘டேய்.. விஜயகாந்த் படம்டா’ என்பதில் ஆரமித்து ‘தமிழ்ல வந்தது மட்டும் தான்டா தப்பு. Hollywood தரம்’ என்ற அலைகற்றையில் மேலேயும் கீழேயும் சென்று வந்தாலும் ஒருமித்த ஒரே புள்ளி இதுதான் – ‘இந்த படத்த ஏன் தடை செய்யணும்னு சொல்றாங்க’?? மேற்கண்ட கருத்தில் இஸ்லாமிய நண்பர்களும் அடக்கம். அப்படி இருந்தும் ஏன் படத்திற்கு தடை கோரினர் அந்த குறிப்பிட்ட அமைப்பினர்? பின்னர் வரலாம்.

நான் படித்தது ஒரு இஸ்லாமிய கல்லூரி. தாளாளர் எனது ஒன்று விட்ட தாத்தாவின் தோழர் என்ற இழையின் முடிவில் என் படிப்பு அமைந்தது. நான் படித்த பள்ளியில் முஸ்லிம் – இந்து எல்லாம் எங்களுக்கு தெரியாது. விடுதி வேறு. ஒன்றுமன்றாய் தான் திரிந்தோம். எங்களுக்கான விதி வேறு. ஏதாவது தப்பு – சேட்டை நடந்து விசாரிக்க ஆரம்பித்தால் எவனும் வாயை தொறக்க கூடாது. செய்யாத தப்பு நம் மேல் விழுந்தாலும். புதிதாக வந்த ஒரு முஸ்லிம் நண்பன் திடீரென்று எல்லா முஸ்லிம் நண்பர்களையும் தொழுகை து – ஆ செய்ய வைத்த பொழுது ஒரு சின்னஞ்சிறிய சலசலப்பு. ‘டேய்.. லூசாடா நீங்க??’ , ‘நாம கோயிலுக்கு போறோம்ல?? அப்படிதா’ என்று விடலை வயசு பெரிய மனுசன்கள் சலசலப்பையும் புரிதலுக்கான மற்றொரு திரியாய் எரித்து விட்டார்கள். இந்த பின்னணியில் இருந்து ஒரு புது கல்லூரியில் காலெடுத்து வைக்கிறேன். வித்தியாசம் முகத்தில் அறைகிறது. தங்கள் செல்பேசியில் ஓசாமா படத்தை screensaver ஆக வைத்திருக்கும் அளவு தீவிரம். காபிர் கிட்ட லாம் உங்களுக்கு என்ன பேச்சு என்று கேட்கும் ‘பள்ளி’யின் தலைமை இமாம். விடுதி உணவகத்தில் கூட நாம் சென்று அருகில் அமர்ந்தால் வேண்டாத விருந்தாளியை விட மோசமான ஒரு வரவேற்பு. எப்படி நடந்தது இது?? பின்னர் வரலாம்.

முஸ்லிம்களுக்குள் சில பத்திரிகைகள் உலாவரும். APJ அப்துல் கலாம் துரோகி என குற்றம் சாட்டப்படுவார். நியாயமான காரணங்கள் உண்டு. சானியா மிர்சா மீது பத்வா, அதன் பொருட்டு எழும் வாதங்கள் சற்று எரிச்சல் மூட்டுபவை. மும்தாஜ், குஷ்பு எல்லாம் விட்டு விட்டு சானியா மீது பாய்வது எனக்கு நியாயமாகப்படாது. பின்னாட்களில் அது மும்தாஜ், குஷ்பு வாக இருந்தாலும் அவர்களை சாடுவதற்கும் எவர்க்கும் உரிமையில்லை என்ற நிலைப்பாட்டுக்கும் நான் வந்தாகி விட்டது. ஆனால் என்னிடம் மட்டும் பேசும் என் முஸ்லிம் தோழிக்கும் எனக்கும் இடையில் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சி மதிப்பான பொறுப்புகளில் இருப்பவர்களிடமும் நடந்த பொழுது சற்றே ஆயாசம் பெருத்தது. ஒரு நாள் நான் முன்னர் கூறிய அந்த வெளியீடுகளை படிக்க நேர்ந்தது. ஒரிசாவில் ஒரு கிராமத்தில் அருகருகே வசிக்கும் இரு குடும்பங்களுக்குள் சண்டை. இந்து – முஸ்லிம். இந்து வீட்டுக்காரர் தன்னுடைய உறவினரான அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் மூலம் அதிகார துஸ்ப்ரயோகம் செய்தார். இதை அந்த மட்டத்தில் பார்த்தல் நல்லது. நாம் முஸ்லிம் என்பதால் தான் அந்த காவல்துறை ஆய்வாளர் இத்தகைய கொடுஞ்செயலை புரிந்தார் என மதத்துவேஷ கூப்பாடு அவசியமா? எங்கேயும் நடப்பது தான். இது அதிகார துஸ்ப்பிரயோகமே தவிர மதச்சார்பு நிலைப்பாடு கிடையாது. மற்ற பதிவுகளும் ஏறக்குறைய இதே போல். இதை படிக்கும் மாணவர்கள் மனம் எந்த மாதிரி சிந்தனைகளில் ஈடுபடும்? இதை மாணவர்களிடம் விநியோகிப்பது எந்த மாதிரியான செயல்?
இதே பாரதத்தில் இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு உகந்த எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் ஏன் இந்த வகையான வெளியீடுகளில் அச்சாகவில்லை? என்ன வகையான கருத்தை படிப்பதற்காக வந்த மாணவர்களிடம் சேர்க்கிறோம்? நான் கொடுத்த இந்த குறிப்புகள் என் ஒருத்தன் வாழ்வில் நடந்தது அல்ல. நான் இங்கு புலம்பவும் இல்லை. நான் பார்த்ததை பதிகிறேன். எங்களுக்கு வீடு பார்த்து கொடுத்து, மிகுந்த வேலைப்பளுவுக்கு நடுவிலும் பரீட்சை காலத்தில் எங்களுக்கும் உணவளித்த சித்திக் உம்மா என் நினைவில் என்றும் நன்றியரிதலுக்கான பகுதியில் பிரகாசமாய். நான் பார்த்தவர்களில் மிகச்சிறந்த மனிதப்பண்புகள் நிறைந்த புகாரி இன்னொரு பக்கம். சில கேவலமான இந்துக்களிடம் சிக்கி மனம் புண்புறுத்தப்பட்ட என் நண்பன் நிசாருக்கு முன்பு மற்றொரு இந்துவாக நான் வெட்கி தலைகுனிகிறேன்.. அவனை பார்க்கும்பொழுது எல்லாம் ஒரு அசிங்கமான உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. இரு சாரார்களிடமும் வெறுப்பை மட்டுமே தேக்கி வைத்திருக்கும் சாக்கடைகள் உண்டு. என் சொந்த ஊரில் திடீரென்று சின்னதுகள் எல்லாம் க்யா – கூ என்று தப்பும் தவறுமாக கராத்தே கத்திக்கொண்டு திரிந்தார்கள். எங்கே எனக்கு தெரியாத மாஸ்டர் யார் அவர் (12 வருட கராத்தே பயிற்சி – சிறிய தாலுகா) என்ற உந்துதலில் தேடினால் கிடைத்தான் ஒரு பரதேசி. கராத்தே என்ற சாக்கில் கிராமப்புற மாணவர்களிடம் முஸ்லிம் துவேசத்தை வளர்த்தெடுத்து கொண்டிருந்தான். VHP படையாம். சகோதரா என்று அழைத்தவனை அந்த நொடி உந்துததலில் அதிகப்படியாக திட்ட ஆரம்பித்த பொழுது இடத்தின் சொந்தகாரர் வந்து சேர்ந்தார். எனக்கும் சொந்தகாரர் என்றபடியால் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிந்தது. அவர்கள் படிக்கும் பள்ளி முதல்வரிடம் பேசி அந்த பையன்கள் கொண்டிருந்த சில கருத்துகள் களைய வேண்டிய முயற்சிகள் எடுக்கப்பட்டது. கண்டிப்பாக முற்றிலும் வெற்றி கிடைக்காது. அப்பாவிடம் பேசி ஊருக்குள் VHP மக்கள் வருகை எதிர்க்கப்பட்டது. பின்னரும் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் ஏதாவது விஷமம் முன்னெடுக்கபட்டே வருகிறது. சரியாக கவனிக்க முடியவில்லை.

பாய்களுக்கு வீடு கொடுப்பதில்லை என்ற வார்த்தையின் வலி எனக்கும் தெரியும். “Are you Brahmin?? Im sorry all the neighbors are Brahmins here. It doesn matter if you know the owner yourself. All the other residents will threaten to vacate and eventually you will be turned down. நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். waste of time. வேற apartment பாத்துகோங்கோ”. இது என் குடும்பத்துக்கு நடந்தது. என் கருத்து இது போன்ற மக்கள் எங்கெங்கும் உள்ளனர். அதற்காக ஒரு சங்கம் அமைத்து கொடி பிடித்தால் இன்னும் வெறுப்பை விதைத்து வெறுப்பை அறுவடை செய்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் விஸ்வரூபம். யாரோ ஒருத்தர் படத்தை பார்த்துவிட்டு இதை தடை செய்யவேண்டும் என்கிறார் உடனே எல்லாரும் ஒரு குரலில். இதெப்படி சாத்தியம்?

Delhi 6 படம் உண்டு. இறுதியில் படத்தில் ஒரு கருத்து வரும். இல்லாத ஒரு குரங்கை முன்னிறுத்தி ஒருத்தர் மேல் ஒருத்தர் கொண்ட வெறுப்பை உமிழ்ந்தபடி இருக்கிறோம் என்று. குரங்கு மாயை என்று எல்லாருக்கும் தெரியும். பாவம் அந்த இல்லாத குரங்கு. படத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அறம் மீறிய செய்கைகளை மறைக்க அந்த இல்லாத குரங்கை பயன்படுத்தி கொள்வார்கள். விஸ்வரூபமும் கமலும் இல்லாத அந்த குரங்கு தான். அந்த தலைவர் உங்கள் அனைவரையும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். படத்தை எதிர்ப்பது நோக்கமாக தெரியவில்லை. ‘பாருங்கடா.. எங்க கிட்ட வச்சுக்கிட்டா அவ்வளவுதான்’ என்ற எக்காளம் மட்டுமே தெறிக்கிறது. உடனே இந்த பக்கம் ஒரு சண்டியர். பேச்சில் மதுரை வாசனை, புலிப்பல் சங்கிலி, காலர் தூக்கிவிடப்பட்ட சிலுக்கு சட்டையில் வன்மம் தெறிக்க ‘கருத்தாக பேசுகிறார்’. ஏன்ப்பா.. எத்தன இந்து – கிறித்தவன் தலை துண்டிக்கப்பட்ட இராணுவ வீரனுக்காக போராடுனான்? நீயும் ஒண்ணுதான். இந்தியால ஏதோ ஒரு மூலைல நடந்த ஒரு சம்பவத்த அல்லாகிட்ட தொழுக வர்ற அப்பாவி சட்டப்பைல திணிச்சு வன்மம் வளக்குறவனும் ஒன்னு தான். முஸ்லிம் அமைப்பு ஏதோ உள்நோக்கத்தோட விஸ்வரூபத்த எதிர்த்தா நீங்களும் அதே உள்நோக்கத்தோட அவங்க நம்பிக்கை மேல பாயுறீங்க?? எதுனால நீங்க நல்லவன் ஆனீங்க இதுல?? எல்லாமே hate crime தான்..

அப்புறம் கார்க்கி. எப்ப இருந்து நண்பா உங்க சிந்தனைல குறுக்கம்?? கமல் இருக்கிற பிரச்சனைய பேசுனாரா இல்ல இல்லாத பிரச்சனைய இழுத்துட்டு வர்றாரா?? Dont Ask Dont Tell Policy யா என்ன?? தேவர் மகன்ல ஜாதி பிரச்சனைய பேசுனாரா?? எத்தன ஜாதி படத்துல வந்துச்சாம்?? எந்த ஜாதி எந்த ஜாதிய வெட்டுச்சாம்??  நாலஞ்சு பீவி பத்தியும் பேசுனவருதான் பாப்பாத்தி பத்தியும் பேசிருக்காரு. விருமாண்டி சொல்லவே தேவையில்ல. இது போன்ற புதுமையான கருத்துக்கள முன்வைக்கறவங்களுக்கு பாரதியார் ஒரு கவிதை எழுதிருக்காப்ல.

மத்த வேறு வாக்குவாதங்களை முன்னிறுத்துபவர்களுக்கு படத்துல ஒரு கருத்து நிஜத்துல ஒரு கருத்து அப்பாலிக்கா பத்து வருஷம் கழிச்சு வசனகர்த்தா மேல பழி – இதெல்லாம் கமல் எங்க செஞ்சாரு?? அன்பே சிவம் படம் ஒன்னு போதுமே.

ஒரு முஸ்லிமும் – இந்துவும் மணம் புரிந்துகொண்டால் வெறிகொண்டு எதிர்ப்பது முதலில் மாறவேண்டும். தவறாக நினைக்க வேண்டாம். ஜமாஅத் போன்ற அமைப்பை மிரட்டல் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் மிரட்டப்பட்டான். ‘ஏண்டி அந்த புள்ளைய கூட்டிகிட்டு எங்க போவ?? எந்த ஊருனாலும் எங்க ஜமா-அத் இருக்கும். ***** புடுவோம்’. என்ன வகையான மிரட்டல் இது? இதுவா ஒற்றுமையை காட்டும் முறை? உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத சமூகம் இன்னொன்று இருக்கிறது. இந்தியாவுக்குள்ளே. நண்பர்களாக. வித்தியாசம் இன்றி. வித்தியாசம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முன் மனிதத்தை முன்னிறுத்தி. அதை நோக்கி எல்லாரும் செல்வோமே. ஜாதி, மதம் கடந்து.. கலந்துபட்டால் தெரியும் ஒற்றுமையின் பக்குவம். மதம் தாண்டிய மனிதம். இந்த பதிவு அவசியம்தானா? என் நண்பர்களை புண்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் பதிவை முடிக்கிறேன். மன்னியுங்கள். நான் இந்து அல்ல. கடவுள் எதிர்ப்பாளன் அல்ல. Pantheist. ஆனால் கேள்வி கேட்காமல், உண்மை தோண்டாமல் ஒரு தலைவன் சொல் பின்பற்றி உங்கள் நண்பர்களை பகைக்கும் அளவு ஒரு மனிதனுடைய 100 கோடி கனவை கலைக்கும் அளவு இவ்வளவு வேகம், மனிதத்துக்கு நன்மை அன்று.. உங்கள் முடிவுகளை நீங்கள் எடுங்கள். கேள்வி கேளுங்கள். மிச்சமிருக்கும் மனிதம் காப்போம்..  இஸ்லாம் வளர்த்தெடுத்த கீழை மேற்கு சேக்குகள் யார்? எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்? அவர்கள் குடிப்பதும் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஆங்கில பாடகிகளை தனி விமானம் கொடுத்து அரைகுறை ஆட்டம் ஆடவிடுவது இஸ்லாமிய அறமா?? காலத்தின் தேவைக்கேற்ப அவர்கள் செய்துகொண்ட சமரசம் தானே?? நம் நாட்டு ஒற்றுமைக்கும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் சில சமரசங்கள் நான் வேண்ட தான் முடியும். கேட்க முடியாது. ஆர்ப்பரிக்க முடியாது. ஏன் என்றால் அது உங்கள் உரிமை.. புரிந்தால் சரி..

மைனர் – https://www.facebook.com/photo.php?v=441016295970854
வேலு நாயக்கன் – http://www.thehindu.com/arts/cinema/of-course-velu-nayakan-doesnt-dance/article4008896.ece
பாரதி – http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=324

Advertisements

6 thoughts on “விசுவரூபம்..

 1. விஸ்வரூபம் பற்றி பதிவோ என் தயக்கத்தோடே ஆரம்பித்தேன். .
  அருமை. .நான் என் அறிவுரைத்த நாட்களில் இருந்த கண்ட பிரச்சினைகளே இந்த தொகுப்பு. .எனவே இது எங்கோ அல்ல எங்குமே நடக்கும் பிரச்சனை தான் சகோ. . கவரப்படாமலோ,கலந்திடாமலோ இதை களைய முற்படும் இக்கால இளைஞர்களிடணுடே மதம் என்ற பெயரில் நஞ்சு பீய்ச்சுவது கண்டால் மனம் நொந்து போகிறது. .
  . .
  இதற்கான அவசிய புரிதலுக்காக, தனிப்பட்ட அனுபவங்கள் தவிர்த்து,பிரளயத்தின் அனுமானம் செய்து,விடைகளை ஆராயும் ஓர் மீள்கட்டுரை எழுதினால் நலம். .
  எழுதவேண்டும் என யாசிக்கிறேன். .
  உதவவும் தலைப்படுவேன். .

  நல்லதோர் பதிவிற்கு என் நன்றிகள் உங்கள் எண்ணங்களுக்கு சமர்ப்பணம். .
  (@silverbullet52x)

  • எழுதுங்கள்.. நானும் subjectivity தவிர்த்து top down முறை ஆராய்ச்சி கட்டுரை ஒன்று எழுத நினைத்து கொண்டிரூக்கிறேன்.. முன்னெடுங்கள்.. பின் தொடர்கிறேன்.. பண்பான பின்னூட்டத்துக்கு நன்றி..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s