அவள்..

#1
உனக்கான என் காதல் பெரும் பகை பூண்டது..
பிற பெண் தேடும் விழிதனை சினம் தெறிக்க வைதது..
உன்னால் உறக்கம் தொலைந்தேனன விழி மறுதலிக்க
பகையிடத்து பேரன்பு கொண்டது என் காதல்..
#2
அழகாய் தெரிவதற்காய் மஞ்சள் பூசி நின்றாய்..
எதிர்பாராமல் என்னை பார்த்ததில், மஞ்சள் சிவந்தது..
என் முகம் பிறந்த சிறுநகை கண்ட நீ மேலும் சிவக்க
வினைதனை மறந்த இதயம் காதலாகி கசிந்துருகியது..
#3
எத்தனையோ காதலை சுமந்த அந்த பாடல்
மொழிகடந்து உன் மடி கிடந்தது..
உன் குரல் தாலாட்டில் மெய்மறந்த அது
என் மடி தாவியது..
#4
சுந்தரத்தெலுங்கு விடுத்து தமிழில் நீ பேச
சினங்கொண்ட தெலுங்கு என்னை கேட்டது..
தமிழன்னை என்னை அள்ளிகொடுக்க
சினம் பறந்தது, புது உறவு பிறந்தது..
#5
என் அருகில் நீயும்
உன் அருகில் நானும்
நம் அருகில் காதலும்
நமக்கான பாடலும்..
தெய்வ நிந்தனைகளில்
தொலைந்த என் மனம்
தேவதை கதையினில்
திரும்ப கிடைத்தது!!
#6
உன் புன்னகையின் சிறப்பை தோழி மெச்சினாள்..
அவளுக்கென்ன தெரியும்?
உன் குறுநகை என் உயிர் அறுப்பதை..
#7
என்னடி செய்கிறாய்?
ஏன் எனை கொல்கிறாய்?
உயிர் அடி தோண்டி
உன்னையே விதைக்கிறாய்..
கிளை விட்டெழுந்து
நரம்பினில் நிறைக்கிறாய்..
இதயம் பிடித்து
இரவுகள் கெடுத்து
தனிமை விடுத்தென்
எலும்பினுள் உறைகிறாய்..
ஒரு வரி வீசி
கவிதை பிடிக்கிறாய்..

கனவாய் நினைவாய்
இரண்டிலும் இறையாய்
எண்ணிலும் எழுத்திலும்
இறவா இசையிலும்
குறையா தமிழிழும்
நிறையா துயிலிலும்
எங்கும் எதிலும்
உன் முகம் பதிக்கிறாய்..
செருக்குடன் சிரிக்கிறாய்..
இன்மை துறக்கிறாய்..

கயல்விழி கவின்மொழி
கொஞ்சி(க்) கொல்கிறாய்..
நொடிதனில் வெல்கிறாய்..
மெள்ள வருகிறாய்..
உள்ளே உறைகிறாய்..

#8
மூங்கிலுக்கும் இசை தந்து செல்கிறது
உன் கூந்தல் முகர்ந்து காதலேற்றிய காற்று..
எதற்கோ நிமிர்ந்து வானம் பார்த்தாய்
உக்கிரம் இழந்து உருக்குலைந்து போனது சூரியன்..
பாதம் தரை தொட்டும் அதிராமல் நடக்கிறாய் நீ
பனிப்போர்வை விலக்கி வெப்பமேறி அதிர்கிறது பூமி..
தயவு செய்து அலைகளுடன் விளையாடதே
உன்னை தொடர்ந்து நிலமேறி வரப்போகிறது கடல்..

#9

மழைபெய்தும் வெயில் அடிக்கிறதென
புருவமேற்றி கண்கள் அகல வியக்கிறாய் நீ..
உன் தொடுகையின் தீட்சை வேண்டி
விதி மறக்கும் இயற்கையை முறைத்தபடி நான்..

#10

எங்கோ தொலைந்த என் கண்கள் பார்த்து
என்னடா கனவா? என்கிறாள் தோழி..
போகும் இடத்தில் நீ இருந்தால் என்னாவேன்
என கற்பனையின் உச்சத்தினை உளறியபடி நான்..
என் இரவுகளை கனவினிலும் நினைவினிலும் நிறைத்திருந்த நீ நிஜத்தினிலும்  நிறைக்க வேண்டி எதிரினில் நிற்க
நடக்கின்ற நிகழ்வுகளின் நிதர்சனம் எதிர்நீட்ட
சலனமற்ற என் முகமோ இன்னமும் குழப்ப
கனவா நினைவா என்ன நடக்குது? என்றாள் தோழி
தேவதை கதையினில் அதிசயங்கள் நடப்பதுதானே??

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s